logo
add image
Blog single photo

கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்:

கோடை துவங்கும் முன்னரே கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட துவங்கி விட்டது. சிக்கனமாக பயன்படுத்தினால், பருவமழை வரும் வரை தற்போதுள்ள இருப்பை வைத்து சமாளிக்கலாம்.கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்கு, தினமும் சிறுவாணி, பில்லுார் 1, பில்லுார் 2, கவுண்டம்பாளையம் - வடவள்ளி, ஆழியார் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம், சராசரியாக, 24.8 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகளவு பெய்ததால், குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை. ஆண்டின் இறுதியில், வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால், கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என, எச்சரிக்கப்பட்டது.இந்நிலையில், முன்கூட்டியே துவங்கிய கோடையால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம், மொத்தமுள்ள, 50 அடியில், 26 அடியாக குறைந்துள்ளது.மற்ற அணைகளிலும் நீர் மட்டம் குறைந்து வருவதால், கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது உறுதியாகி விட்டது. இது, தற்போதே மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், எதிரொலிக்க துவங்கியுள்ளது. கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க, மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோக இடைவெளியை அதிகரித்துள்ளது.

மாநகராட்சியின் ஒரு சில பகுதிகளை தவிர, பிற பகுதிகளில், ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, வினியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது, 10 நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் காலிக்குடங்களுடன் குழாய்களில் காத்துக்கிடக்கின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்றனர்.

footer
Top