தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள மருதமலையின் மீது இக்கோயில் அமைந்துள்ளது. இம்மலை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சேர்ந்தது. கோயம்புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்தும், தொடருந்து நிலையத்திலிருந்தும் இங்கு செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. மலை அடிவாரம் வரை தமிழக அரசுப் பேருந்துகள் செல்கின்றன. மலையின் மீது படியேறி கோவிலுக்கு நடந்து செல்லலாம்; அல்லது கோயில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டணச் சிற்றுந்துகளில் மலைப்பாதையில் செல்லலாம். தனியார் இரு சக்கர வாகனங்களும் மகிழுந்துகளும் கட்டணம் செலுத்தி மலைப்பாதை மூலம் மேலே கோயிலுக்குச் செல்லலாம்
மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது. முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன. முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.
பேரூர் பட்டீசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோயில் ஆகும். இக்கோயில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இக்கோயில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோயிலின் தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பக்தர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இத்திருக்கோயிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்; ஆரண்யம் = காடு).மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி,ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன
இக்கோயில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலதில் சோழ பேரரசன் ராஜ ராஜ சோழன் ஆட்சியில் இக்கோயிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன. பின்னர் பதினேழாம் நூற்றாண்டு வரை போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன. இக்கோயிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் செப்பனிடப்பட்டது.