கரி தானுந்து விரைவுச்சாலையில் ஓர் தானுந்து ஓட்டப்போட்டி தானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டித் தலைநகரம் என்றும் இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை என்றும் விளிப்பர். கோவையின் தொழிலதிபர்கள் சிலர்,கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் ஃபார்முலா 3 பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தயச் சாலைகளும் உள்ளன. பார்முலா பந்தயம், விசையுந்துப் பந்தயம், கார்ட்டு பந்தயம் ஆகியவற்றிற்குத் தேசியச் சாதனைப் பந்தயங்கள் இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும் கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. ஃபார்முலா ஒன்று பந்தயத்தில் 2005ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். தொன்மையான தானுந்துகளைச் சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின் பொழுதுபோக்காகும். நேரு விளையாட்டரங்கம் கால்பந்து போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட போதும் இங்கு தடகள விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது செயற்கை தடங்களுடன் நடுவில் கொரிய புல்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர பல விளையாட்டு மன்றங்களும் உள்ளன. புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோவையைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் குழிப்பந்தாட்ட மன்றம் ஒர் 18 குழிகள் கொண்ட மைதானத்தைக் கொண்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் மன்றம்,இந்தியர்களுக்கு மட்டுமே உறுப்பினராக உரிமை வழங்கியது.