கோவை : நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய, கோவை இளைஞர் மணிகண்டனுக்கு, தென்னிந்திய சமூக செயல்பாட்டாளருக்கான தேசிய விருது நேற்று வழங்கப்பட்டது.
கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,38, நீர் மேலாண்மையில் மிகுந்த அக்கறை கொண்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாக, சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். 2017ல், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தினார்.கடந்த நான்கு ஆண்டுகளில், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, நொய்யல் ஆறு, பேரூர் சுண்டக்காமுத்துார் குளம், செங்குளம், வெள்ளலுார் குளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளை துார்வாரினார்.
176 வாரம் தொடர் களப்பணியாற்றினார். நீர்நிலைகளில், 113 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. 7,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.வெள்ளலுார் குளக்கரையில், பல்லுயிர் சூழலை உருவாக்க, 'மியாவாக்கி' முறையில், 6,000 மரக்கன்றுகள் நட்டு, குறுங்காடு உருவாக்கப்பட்டது. குளக்கரைகளில், ஒரு லட்சத்து, 36 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.
இயந்திரங்கள் உதவியுடன், 400 ஏக்கர் சீமை கருவேல முள் மரம் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டன. 19.5 கி.மீ.,க்கு நீர் வழித்தடங்கள் துார்வாரப்பட்டன.நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும், தென்னிந்திய சமூக செயற்பாட்டாளருக்கான விருதுக்கு, மணிகண்டனை, மத்திய அரசின் நீர்வள அமைச்சகம் தேர்வு செய்தது. டில்லி, விஞ்ஞான் பவனில் இருந்து, 'ஆன்-லைன்' முறையில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பங்கேற்றனர்.
மணிகண்டன் கூறுகையில், ''நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை மாணவர்கள், இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பசுமை பரப்பை அதிகரிக்க, 2021 இறுதிக்குள், 50 ஆயிரம் மரக்கன்று நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். தமிழகத்தில், நீர் வளத்துறைக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தப்படும் குளங்களை தொடர்ந்து பராமரிக்க, கலெக்டர் தலைமையில் தன்னார்வலர்கள் அடங்கிய ஆலோசனை குழு உருவாக்க வேண்டும். நீர் நிலைகள் அருகாமையில் உள்ள குப்பை கிடங்குகளை அகற்ற வேண்டும், என்று கூறினார்