கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பேட்டி : - நான்கு சட்டமன்ற இடைத் தேர்தல் ஆதரவு குறித்து, செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார் கோவை போத்தனூர் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிரான வெறுப்பு அலை வீசியதாகவும், 30 க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் எனவும் தெரிவித்தார். நான்கு சட்டமன்ற இடைத் தேர்தல் ஆதரவு குறித்து, விரைவில் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார். அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த அவர், தொடர் விடுமுறை காரணமாக ஓட்டுப்பதிவு குறைந்துள்ளதாக தெரிவித்தார். திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தற்காக தன் மீது கட்சி தாவல் தடை சட்டம் வந்தால் அதை எதிர்க்கொள்வேன் எனவும், கொள்கைக்காக பதவி இழக்க தயார் எனவும் அவர் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார் எனவும், சினிமா விளம்பரத்திற்காக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். சிதம்பரம் தொகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.