ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர்.மகேந்திரன் வாக்குறுதி அளித்தார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில், கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஆர்.மகேந்திரன், நீலாம்பூர், உக்கடம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதற்காகவே அரசியலில் களம் காண்கிறோம். தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்றால் ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வருவோம். இதற்கு வாக்காளர்கள் 'டார்ச் லைட்' சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்காமலேயே நிறைவேற்ற பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். மக்கள் நீதி மய்யம் கோவை சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் ஸ்ரீனிவாசன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்.மகேந்திரனுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.