கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் வேளாண் பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இருந்தாலும் பாலக்காடு மாவட்டத்தில் போதிய மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் பாலக்காடு மாவட்டத்தில் நேற்று முதல் பலத்த மழை பெய்ய தொடங்கி உள்ளது.
இதனால் கோவை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மழை தொடங்கி உள்ளது. காலையிலும் லேசான மழை தூறலாக இருந்தது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக வானிலை ஆய்வு மைய அதிகாரி ராமநாதன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இது வரை 3 மி.மீ. பெய்து உள்ளது. மேலும் 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 15-ந் தேதிக்கு பின்னர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் கோவை மாவட்டத்தில் சராசரியாக 190 மி.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு 4 மி.மீ. கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு சராசரியாக 194 மி.மீ. பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தென் மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி இருப்பதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கியதுடன், சில இடங்களில் பயிர் நடவு பணியையும் தொடங்கி வேளாண் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்