logo
add image
kovai-rain

பத்மஸ்ரீ விருது பெற்ற 'யோகா பாட்டி' கோவை நானம்மாள் காலமானார்

கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வந்த நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்தார்.. இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் 8 வயது சிறுமியாக இருக்கும்போது தனது தந்தையிடமிருந்து யோகாசனம் கலையை கற்றுத் தேர்ந்தார். சிறிய வயதில் கற்ற பயிற்சிகளை முறையாக செய்யத்துவங்கிய நானம்மாள், அதை 99 வயது கடந்த போதிலும் விடுவதாயில்லை. இவருடைய நல்ல உள்ளத்துக்கும் யோகாவுக்கும் ஏற்றார் போல், இவரது கணவர் சித்த வைத்தியராக அமைந்தார். அவர், நானம்மாளின் யோகாவை பாரட்டினாரே தவிர, தடை விதிக்கவில்லை.
சமீபநாட்களாக வயோதிகம் சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த நானம்மாள் தனது 99-ம் வயதில் கோவையில் காலமானார். இதனிடையே இவரின் திறமையும் சேவையும் பாராட்டி மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இது கோவை மக்களிடையே மட்டுமின்றி தமிழக மக்களிடையிலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2016-ம் ஆண்டில் மகளிரின் வலிமை என்னும் பொருள்படும் 'நாரிசக்தி' விருது மற்றும் 2017-ம் ஆண்டில் 'யோகா ரத்னா' விருது ஆகியவற்றை பெற்றுள்ள நானம்மா 'யோகா பாட்டி' என்ற பெயரில் கடந்த ஆண்டு ஊடகங்களில் சிறப்பான இடத்தை பிடித்திருந்தார். நானம்மாளுக்கு 6 பிள்ளைகள், 12 பேரன்-பேத்திகள், 11 கொள்ளு பேரன்-பேத்திகள் உள்ளனர்.
யோகா பாட்டி நானம்மாள் மறைந்தாலும் இவர் கற்றுத் தேர்ந்த யோகா மூலம் மிக சிறந்த பல உலக தரம் வாய்ந்த யோகா ஆசிரியர்களை உருவாக்கினார். ஓசோன் யோகா என்ற பெயரில் கோவை கணபதியில் இவரது மகன் யோகா மாஸ்டர் பாலகிருஷ்ணன் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


footer
Top