கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குறிச்சி குளத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52 கோடியே 16 லட்சத்தில் சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தொழில் வளர்ச்சியிலும் சரி, மேம்படுத்தப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளிலும், மக்களுக்கான வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றுவது என அனைத்து நிலைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக கோவை மாநகராட்சி விளங்கி வருகிறது. கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைத்தல், குடிநீர் பாதாள சாக்கடை, சூரிய மின்சக்தி, எல்.இ.டி விளக்குகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், மாதிரி சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.52.16 கோடி செலவில் குறிச்சி குளம் சீரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த குளம் 334.92 ஏக்கர் பரப்பளவையும், 50 மில்லியன் கனஅடி கொள்ளளவையும் கொண்டது ஆகும். மொத்த நீர்பிடிப்புப் பகுதி 12.30 சதுர கி.மீ ஆகும்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாக பொதுமக்களின் பொழுது போக்கு மற்றும் உடற்பயிற்சி திறன் மேம்பாட்டிற்காக 5.50 கி.மீ நீளத்திற்கு மிதிவண்டி பாதை, பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள 5.50 கி.மீ நீளத்திற்கு நடைபாதை, குளக்கரையில் நான்கு இடங்களில் அலங்கார வளைவுகள், பாதசாரிகள் உண்டு மகிழ குளக்கரையின் ஓரத்தில் 47 சிற்றுண்டிகள் மற்றும் பல வகையான சிறு அங்காடிகள் அமைக்கப்படுகின்றன.
கோவை-பொள்ளாச்சி சாலையின் மேற்புறம் நவீன வகையான வாகன நிறுத்துமிடம், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடங்கள், குளத்தைச் சுற்றி 5½ கி.மீ நீளத்திற்கு வண்ணமயமான அலங்கார விளக்குகள், 2 இடங்களில் பசுமை சமுதாய கூடம் கட்டப்படுகிறது. 36 இடங்களில் காற்றாலை கோபுரங்கள், குளத்தின் அழகை கண்டுகளிக்க 23 இடங்களில் பார்வையாளர் மாடங்கள், மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனக் காட்சியினை கண்டுகளிக்க ஏதுவாக சிறப்பு பார்வையாளர் மாடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 7 இடங்களில் பாதுகாவலர் கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும் முடியும் போது மேலைநாடுகள் போல் கண்கவர் பகுதிகளாக கோவை விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம் என மொத்தம் ரூ.1 கோடியே 1 லட்சத்து 60 ஆயிரத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி, மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத், துணை ஆணையாளர் மதுராந்தகி, மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், முன்னாள் கவுன்சிலர்கள் பெருமாள்சாமி, வேணுகோபால், ரபீக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.